குரூப்-4 முறைகேடு விவகாரம்: முதல் 35 இடங்களை பெற்றவர்கள் விசாரணைக்கு அழைப்பு


குரூப்-4 முறைகேடு விவகாரம்: முதல் 35 இடங்களை பெற்றவர்கள் விசாரணைக்கு அழைப்பு
x
தினத்தந்தி 9 Jan 2020 8:24 PM IST (Updated: 9 Jan 2020 8:24 PM IST)
t-max-icont-min-icon

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில் தற்போது தேர்வில் முதல் 35 இடங்களை பெற்றவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வுக்கான முடிவுகளை கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டது.

தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது.

அதன்படி முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றவர்களில் 40 பேர் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியிருப்பவர்களாக உள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் அந்த 40 பேர்தான் இடஒதுக்கீடு தரவரிசை பட்டியலிலும், மாநில அளவில் முதல் 5 இடங்களை பெற்றவர்களின் பட்டியலிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தேர்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில், முறைகேடு புகார்கள் குறித்து டி.என்.பி. எஸ்.சி தனது விசாரணையை தொடங்கியது.

அதன் முதற்கட்டமாக வரும் திங்கள்கிழமையன்று, குரூப்-4 தேர்வில் முதல் 35 இடங்களை பெற்றவர்கள் அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Next Story