நெல்லை கண்ணனுக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது


நெல்லை கண்ணனுக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
x
தினத்தந்தி 10 Jan 2020 5:49 PM IST (Updated: 10 Jan 2020 5:49 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை கண்ணனுக்கு இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நெல்லை

நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் கடந்த மாதம் (டிசம்பர்) 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், குடியுரிமை பாதுகாப்பை வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வினர் நெல்லை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அப்போது அவர் பெரம்பலூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை கண்ணனை பெரம்பலூரில் வைத்து போலீசார் கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே அவர் மீது மேலப்பாளையம் போலீசார் மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், நெல்லை கண்ணனை நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 13-ந்தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு பாபு உத்தரவிட்டார்.  இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். பின்னர் நெல்லை கண்ணன் நிர்வாக காரணங்களுக்காக  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தாம் நெல்லை பாணியில் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை கண்ணன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மேலும் தமக்கு ஜாமீன் வழங்க கோரி நெல்லை நீதிமன்றத்திலும் அவர் மனுத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நெல்லை மாவட்ட நீதிமன்றம் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து நெல்லை கண்ணன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

Next Story