இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் பேட்டி


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2020 4:45 AM IST (Updated: 11 Jan 2020 2:10 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கினால்தான் நன்மை கிடைக்கும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கூறினார்.

வேலூர்,

வேலூர் தமிழ்ச்சங்கம் மற்றும் ஊரீசு கல்லூரி சார்பில் நேற்று தமிழர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் விழா நடந்தது. இதற்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தரும், வேலூர் தமிழ்ச்சங்க நிறுவனருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். விழாவில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் விக்னேஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

30 வருடங்களாக இங்கே இருக்கும் இலங்கை தமிழ் மக்கள் பல விதமான சலுகைகளை பெற்றிருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பது பற்றி சிந்திக்கிறார்கள். அதில் சட்ட சிக்கல்கள் சில இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சட்ட சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும். அப்போதுதான் நன்மை கிடைக்கும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரட்டை குடியுரிமை சம்மந்தமாக ஒரு உடன்பாடு இல்லாத காரணத்தினால் சில பிரச்சினைகள் இருக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிடிபட்டவர்கள் அந்த கொலையில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களா? என்று எனக்கு தெரியவில்லை.

அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை அவர்களை விடுவிக்காமல் இருப்பதற்கு வேறு அரசியல் காரணங்கள் இருக்குமா? என எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்

Next Story