இன்று முதல் அமல்: ஊட்டி மலைரெயில் கட்டணம் ரூ.600 ஆக உயர்வு


இன்று முதல் அமல்:   ஊட்டி மலைரெயில் கட்டணம் ரூ.600 ஆக உயர்வு
x
தினத்தந்தி 1 March 2020 5:59 AM IST (Updated: 1 March 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மலைரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் மலைரெயில் 10 மணிக்கு குன்னூரை சென்றடைகிறது. அங்கிருந்து மீண்டும் 10.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. மதியம் 2 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் ரெயில் மாலை 5.35 மணிக்கு மீண்டும் மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.

இந்த நிலையில் தற்போது மலை ரெயிலில் பயணம் செய்ய கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. மேலும் அனைத்தும் ஆன்லைன் முன்பதிவாக மாற்றப்பட்டு உள்ளது. இதுவரை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முன்பதிவுடன் முதல் வகுப்பு கட்டணமாக ரூ.365, ஊட்டிக்கு ரூ.470, முன்பதிவுடன் இரண்டாம் வகுப்பு கட்டணமாக குன்னூருக்கு ரூ.100, ஊட்டிக்கு ரூ.145, முன்பதிவில்லா கட்டணமாக குன்னூருக்கு ரூ.50, ஊட்டிக்கு ரூ.75 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முன்பதிவுடன் முதல் வகுப்பு கட்டணமாக ரூ.445, ஊட்டிக்கு ரூ.600, முன்பதிவுடன் இரண்டாம் வகுப்பு கட்டணமாக குன்னூருக்கு ரூ.190, ஊட்டிக்கு ரூ.295, முன்பதிவில்லா கட்டணமாக குன்னூருக்கு ரூ.110, ஊட்டிக்கு ரூ.175 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் மலைரெயிலுக்கு மட்டுமே பொருந்தும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ரெயிலுக்கு இந்த உயர்வு பொருந்தது. இந்த மலைரெயில் கட்டண உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story