வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் மருத்துவ வசதி - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் மருத்துவ வசதி உள்ளது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தமிழக மாவட்டங்களில் தனி சிறப்பை கொண்ட மாவட்டம் ஆகும். வரலாற்று பெருமை உடையதும், ஆன்மிக தொடர்பும் கொண்டதுமான ராமநாதபுரம் மாவட்டம் மதநல்லிணக்கத்தை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டி தமிழகத்திற்கு தனிப்பெருமை தருகின்ற ஒப்பிலா மாவட்டம் ஆகும்.
கிழவன் சேதுபதி காலத்தில் அமைச்சராக இருந்த இஸ்லாமியரான வள்ளல் சீதக்காதிக்கும், இந்து மன்னரான கிழவன் சேதுபதிக்கும் இருந்த நட்பு இரண்டு மதங்களையும் சேர்ந்த மக்களையும் மத வேறுபாடற்ற மன ஒற்றுமை கொண்ட மக்களாக இணைத்துள்ளது. இந்த நட்பு பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் தொடர்கிறது. பல பெருமைகளை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் புதிய மருத்துவ கல்லூரியை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ தரத்தை தமிழ்நாடு பெற்றிட வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் கனவு, லட்சியம், குறிக்கோள். அதற்கு ஏற்ப கடந்த 9 ஆண்டுகளில் மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கென ஜெயலலிதாவின் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதிய மருத்துவமனைகள், புதிய மருந்தகங்கள், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதி தமிழகத்தில் உள்ளது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டு, அனைத்து தரப்பு ஏழை, எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை, உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.5,989 கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரே ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவ கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 1100 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொன்னான வாய்ப்பு கிட்டியுள்ளது.
இம்மருத்துவ கல்லூரிக்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, புதிய மருத்துவ கல்லூரி விரைவில் திறக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும், குறிப்பாக மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த மருத்துவ கல்லூரியும், அதனுடன் அமைந்துள்ள அரசு மருத்துவமனையும் பேருதவியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story