தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் -2 பொதுத்தேர்வு தொடங்கியது
2019-20-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
சென்னை,
2019-20-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
பழைய பாடத்திட்டத்தில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 10 ஆயிரத்து 683 தனித் தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) பழைய பாடத்திட்டத்தில் 5 ஆயிரத்து 828 தனித்தேர்வர்களும், புதிய பாடத்திட்டத்தில் 2 ஆயிரத்து 655 நேரடி தனித்தேர்வர்களும் என மொத்தம் 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 68 புதிய மையங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். அக்குழுவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக்கல்வி அதிகாரிகளால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story