தி.மு.க. எம்.பி. கதிர்ஆனந்த் குடிநீர் ஆலைக்கு ‘சீல்’ - நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாததால் நடவடிக்கை
நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாததால் தி.மு.க. எம்.பி. கதிர்ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
வேலூர்,
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உரிமம் இல்லாத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத தனியார் குடிநீர் ஆலைகளை கண்டுபிடித்து ‘சீல்’ வைத்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 40 குடிநீர் ஆலைகளில் நிலத்தடி நீர் எடுக்க உரிமம் பெறாத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத ஆலைகள் குறித்து கணக்கெடுக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன்பேரில் பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் கோட்டப்பிரிவு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 3 ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெற்றிருப்பதும், 37 ஆலைகள் உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து உரிமம் பெறாத 37 குடிநீர் ஆலைகளின் ஆழ்துளை கிணறுகளை மூடி ‘சீல்’ வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் 29 குடிநீர் ஆலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று மீதமுள்ள 8 குடிநீர் ஆலைகளின் ஆழ்துளை கிணறுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி அருகே உள்ள உள்ளிப்புதூரில் இயங்கி வரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கதிர்ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலை நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாதது தெரிய வந்தது. அந்த ஆலை ஆழ்துளை கிணறுக்கு வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் சீல் வைத்தனர். தொடர்ந்து மீதமுள்ள 7 ஆலைகளின் குடிநீர் கிணறுகளுக்கும் சீல் வைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்து வருகிறோம். வேலூர் மாவட்டத்தில் உள்ள 40 குடிநீர் ஆலைகளில் 37 ஆலைகளில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறவில்லை. அனுமதி பெறாத ஆலைகளின் ஆழ்துளை கிணறுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் அனைத்து குடிநீர் ஆலைகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story