ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ‘டிக்டாக்’ வீடியோ: தமிழக அரசிடம் காங்கிரஸ் புகார்
ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ‘டிக்டாக்’ வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி தமிழக அரசிடம் புகார் அளித்துள்ளது.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடம், காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏ. டி.என்.முருகானந்தம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடக் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். யூ டியூப்பில் வெளியாகியுள்ள ஒரு டிக்டாக்கை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதில், துரைமுருகன் என்ற நபர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சட்டவிரோதமாக புகுந்து, அங்கிருந்தபடி வீடியோவை பதிவிட்டுள்ளார். ராஜீவ்காந்தியை படுகொலை செய்ததை பெருமையாக கருதுவதாகவும், அதை பொதுமக்கள் மத்தியில் சொல்ல தயக்கமில்லை என்றும் கூறுகிறார்.
போலீசாரின் கவனக்குறைவு காரணமாகத்தான் எங்கள் தலைவர் ராஜீவ்காந்தியை இழக்க நேரிட்டது. இப்போது அந்த நபரின் செயல்பாடு எங்களின் வேதனையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. எனவே அந்த நபர் மீது உடனடியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கையை நாட வேண்டியதாகிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story