மாவட்ட செயலாளர்களுடன் நாளை ரஜினிகாந்த் சந்திப்பு: ஆகஸ்டில் மாநாடு நடத்த திட்டம்


மாவட்ட செயலாளர்களுடன் நாளை ரஜினிகாந்த் சந்திப்பு: ஆகஸ்டில் மாநாடு நடத்த திட்டம்
x
தினத்தந்தி 4 March 2020 5:45 AM IST (Updated: 4 March 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நாளை (வியாழக்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்’ என்று அறிவித்தார்.

இதையடுத்து அவருடைய ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகிகளை ரஜினிகாந்த் நியமித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தினார்.

அதே நேரத்தில் அவர் ‘2.0.’ ‘காலா’, ‘பேட்ட’, தர்பார்’ என்று வரிசையாக திரைப்படங்களிலும் நடித்தார். தற்போது ‘அண்ணாத்த’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சினிமா பணிகளுக்கிடையே தனது மக்கள் மன்ற பணியையும் அவர் கவனித்து வந்தார். இந்தநிலையில் “ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவார்” என்று அவரது அண்ணன் சத்தியநாராயணா சமீபத்தில் அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் தலைமையில் அவரது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. கோடம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தனித்தனியாக தகவல் அனுப்பி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சியை எப்போது தொடங்குவது? கட்சி பெயர், கொடி போன்றவை முடிவு செய்வது உள்ளிட்டவைகள் குறித்து ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா? அல்லது தனித்து களம் இறங்கலாமா? என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூறும் ஆலோசனைகள், கருத்துகளையும் ரஜினிகாந்த் கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருப்பதால் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டும் இருப்பதால் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவார் என்றும், கட்சியின் முதல் மாநாட்டை ஆகஸ்டு மாதம் நடத்துவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு அன்று ரஜினிகாந்த் தனது கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story