தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் - 1 பொதுத்தேர்வு தொடங்கியது


Representative image
x
Representative image
தினத்தந்தி 4 March 2020 4:37 AM GMT (Updated: 4 March 2020 4:37 AM GMT)

2019-20-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

சென்னை,

2019-20-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற உள்ள ஒவ்வொரு தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 400 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 தேர்வர்களும், 6 ஆயிரத்து 356 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் இந்த பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 691 மாணவிகளும், 3 லட்சத்து 88 ஆயிரத்து 783 மாணவர்களும், 1 மூன்றாம் பாலினத்தவரும் தேர்வு எழுதுகின்றனர். இந்த ஆண்டு கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 113 தேர்வு மையங்களுடன் சேர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 ஆயிரத்து 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு வேலூர், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, கோவை, பாளையங்கோட்டை, திருச்சி, சேலம் மற்றும் புழல் சிறைகளில் உள்ள 100 ஆண் சிறை கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ்-1 பொதுத்தேர்வுக்காக மொத்தம் 44 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 தேர்வு மைய வளாகத்துக்குள் தேர்வர்கள் செல்போன் எடுத்துவரக்கூடாது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் செல்போன் வைத்திருக்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை மீறும் தேர்வர்கள், ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

Next Story