ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஏற்று குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஏற்று குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
சென்னை,
சட்டவிரோதமாக, அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி முதல் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம், பெருநகர சென்னை அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன. அதன்படி, கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தம் நடந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதனை ஏற்று, குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தங்களுடைய வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இலங்கேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசாணை 142-ஐ முறையாக பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதில் நிலத்தடி நீரை எடுப்பது தொடர்பாக விண்ணப்பம் கொடுத்தால் அதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கருத்துகளையும் ஐகோர்ட்டு முன்வைத்துள்ளது.
அதனை ஏற்று நாங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். 2014-ல் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு இதில் சற்று விலக்கு அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மற்றபடி சட்டத்தை மீறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இதனை வரவேற்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக நாங்கள் அரசை சந்தித்து அடுத்தகட்ட நகர்வு குறித்து பேச இருக்கிறோம். அதில் தற்காலிகமாக மூடப்பட்ட ஆலைகள் குறித்தும் பேசி, தீர்வு காண உள்ளோம். இதுவரை சுமார் 600 குடிநீர் ஆலை நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஆலைகளை மூடி வைப்பதால் அது சார்ந்த உரிமையாளர்களுக்கு பொருட்செலவு அதிகம் ஆகும். எனவே அரசு இதனை கனிவோடு பரிசீலித்து முடிவு எடுக்கவேண்டும். வெயில் காலம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பயன்படுத்தி போலி நிறுவனங்கள் உள்ளே வர முயற்சிப்பார்கள். அதனை அரசு தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story