அனுமதி பெறாமல் நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகள், தொழிற்சாலைகளுக்கு உடனே ‘சீல்’ வைக்கவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
உரிய அனுமதி பெறாமல் இயங்கும் தனியார் குடிநீர் ஆலைகளையும், சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளையும் அதிகாரிகள் உடனடியாக மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நிலத்தடி நீரை மேம்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர். அதன்படி தமிழகம் முழுவதும் 684 ஆலைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன. இதையடுத்து தனியார் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் நேற்று பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-
உரிமம் பெறாததால் மூடப்பட்ட குடிநீர் ஆலைகள் அரசு விதிகளை பின்பற்றி மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பங்களை தமிழக அரசு சட்டத்துக்குட்பட்டு 15 நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
அதன்பிறகும் உரிய அனுமதி பெறாமல் இயங்கும் தனியார் குடிநீர் ஆலைகளையும், சட்டவிரோதமாக நிலத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளையும் அதிகாரிகள் உடனடியாக மூடி ‘சீல்’ வைக்க வேண்டும். குடிநீர் ஆலைகளுக்கு புதிதாக விண்ணப்பிக்கும் போதோ அல்லது உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கும்போதோ குடிநீர் ஆலை உரிமையாளர்கள் அனைவரிடமும் ரூ.50 ஆயிரத்தை முன்வைப்பு தொகையாக வசூலிக்க வேண்டும்.
நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுப்பதாக இருந்தால் அதுதொடர்பான அறிக்கையை அடுத்த விசாரணையில் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்யவேண்டும்.
நிலத்தடி நீர் சட்டவிரோதமாக திருடப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் குறைந்தது 10 ஆண்டுகள் வக்கீல் தொழிலில் உள்ள 2 பேரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
இந்தக்குழு மாதத்துக்கு 2 முறை திடீர் ஆய்வு மேற்கொண்டு, சட்டவிரோதமாக குடிநீர் ஆலைகள் செயல்படுவதை கண்டுபிடித்தால், அதுகுறித்து ஐகோர்ட்டுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அறிக்கை அனுப்பவேண்டும்.
நிலத்தடி நீரை மாவட்டம் வாரியாக அளவீடு செய்து சமீபத்திய அறிக்கை தாக்கல் செய்வது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உறுதிசெய்வது, உரிமம் பெற்றுள்ள ஆலைகள் எவ்வளவு நீரை எடுக்கிறார்கள் என்பதற்கான அளவீடு கருவியை பொருத்துவது மற்றும் ஆலைகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story