தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் ஏவும் பணி ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் ஏவும் பணி திடீரென ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.
சென்னை,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் செலுத்தி வருகிறது. மேலும் பூமி கண்காணிப்பு, காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது பூமி கண்காணிப்புக்காக ஜிசாட்-1 என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.
இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-10 என்ற ராக்கெட் மூலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தனர்.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறியதாவது:-
பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஜிசாட்-1 என்ற அதிநவீன சக்தி கொண்ட செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று விண்ணில் ஏவ திட்டமிட்டு இருந்தோம். இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 3.43 மணிக்கு தொடங்க இருந்தது.
ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கவுண்ட்டவுன் தொடங்குவதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன. போர்க்கால அடிப்படையில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். மீண்டும் ஏவப்படும் தேதி, நேரம் முறையாக பின்னர் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story