நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை: கடன் தொல்லை காரணமா? போலீசார் விசாரணை
நடிகர் ஆனந்தராஜின் தம்பி கனகசபை தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி திருமுடிநகர் முதலாவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கனகு என்கிற கனகசபை (வயது 40). இவர் பிரபல நடிகர் ஆனந்தராஜின் தம்பி ஆவார். திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்தார். தினமும் அதிகாலை எழுந்துவிடும் நிலையில் நேற்று அவரது வீட்டு கதவு நீண்டநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் அங்கு வந்த உறவினர்கள் வீட்டின் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதுபற்றி அறிந்த பெரியகடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் அங்கு கனகசபை பிணமாக கிடந்தார். அருகில் விஷபாட்டில் கிடந்ததால் அவர் அதை குடித்து தற்கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் கனகசபையின் வீட்டில் சோதனை போட்டதில் அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருப்பது என்ன? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.
கனகசபை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டு தற்கொலை செய்து இருக்கலாமா? அல்லது வேறு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கனகசபை தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து ஏலச்சீட்டு போட்டவர்கள் அவருடைய வீட்டின் முன்பு திரண்டனர். கனகசபையிடம் கொடுத்த பணத்தை யாரிடம் கேட்பது? என்பது தெரியாமல் அவர்கள் அலைமோதினர்.
Related Tags :
Next Story