சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க வெளிமாநிலத்தவரை நியமிப்பதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக வெளிமாநிலத்தவரை நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை கவர்னர் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா?.
சென்னை பல்கலைக்கழகத்துக்கு வெளிமாநிலத்தவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் தேடல் குழு தலைவராக ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வெளிமாநில துணைவேந்தரை நியமித்ததால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழிவது போன்று சென்னை பல்கலைக்கழகத்தையும் சீரழிந்து விடக்கூடாது.
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் படிப்படியாக வெளிமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது. இந்த அணுகுமுறையை பல்கலைக்கழக வேந்தர் கைவிட வேண்டும். தமிழக அரசு இதை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story