தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை  - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 6 March 2020 10:37 AM IST (Updated: 6 March 2020 10:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

சென்னை

சீனா யுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை  98,424 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் மட்டும் 3042 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும்  3,386 பேர் பலியாகி உள்ளனர். 55,638  பேர் இந்த நோயில் இருந்து குணமாகி உள்ளனர்.

இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் கொரோனா  வைரஸ் சோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்பது குறித்து  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை; கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் நன்றாக கை கழுவ வேண்டும்; பீதியடைய வேண்டாம்.

தமிழகத்தில்  விமான நிலையங்களை தொடர்ந்து , துறைமுகங்கள், ரெயில் நிலையங்களிலும் சோதனை நடைபெறும்.

கொரோனா எதிரொலி விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளை ஆய்வு செய்ய நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.  வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் உள்பட அனைத்து பயணிகளையும் சோதனை  நடத்துகிறோம் 

கைகளை கிருமி நாசினி மூலம் அடிக்கடி கழுவ வேண்டும். இருமல்,காய்ச்சல், மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச்  செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

1,200க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.சந்தேகத்தின் பேரில் 1654 பேரை கண்காணித்தோம். 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு தனி வார்டு அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும், அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் முக கவசம் அணியவேண்டிய அவசியம் ஏற்படவில்லை

வெப்ப நிலை அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் என்பது இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை. கொரோனா குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்க அதிக கவனம் தேவை என கூறினார்.

Next Story