குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததற்காக ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்ட சினிமா பைனான்சியர் மகனுக்கு அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு


குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததற்காக ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்ட சினிமா பைனான்சியர் மகனுக்கு அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 March 2020 7:22 AM GMT (Updated: 6 March 2020 7:22 AM GMT)

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததால் தமிழக அரசிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த சினிமா பைனான்சியர் மகனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா. இவர் கடந்த ஆண்டு மரணம் அடைந்து விட்டார். இவரது மகன் ககன் போத்ரா. கடந்த 2017-ம் ஆண்டு முகுந்த் சந்த் போத்ரா, ககன் போத்ரா ஆகியோர் மீது சென்னை போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து இருவரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து, தங்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததால், சமுதாயத்தில் தங்களுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாக கூறி, தமிழக உள்துறை செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் இருந்து ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ககன் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ், ‘அரசு அல்லது அரசு அதிகாரிகள் நல்லெண்ணத்துக்காக அல்லது சட்டத்தின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளும் சட்டப்படியான நடவடிக்கைக்காக, அரசுக்கு எதிராகவோ, அதிகாரிகளுக்கு எதிராகவோ குற்றவழக்கு அல்லது இழப்பீடு கேட்டு சிவில் வழக்கு தொடர முடியாது என்று குண்டர் தடுப்பு சட்டத்தின் பிரிவு 16 கூறுகிறது’ என்று கூறினார். அந்த சட்டப்பிரிவை நீதிபதி முன்பு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், மனுதாரர் ககன் போத்ராவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Next Story