பேராசிரியர் க.அன்பழகனின் உடல் தகனம் செய்யப்பட்டது
மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை,
தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கியவர் பேராசிரியர் அன்பழகன் (வயது 98). உடல்நிலை பாதிப்பு முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்தார்.
அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
வயது முதிர்வு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை. நினைவிழந்த நிலையில் இருந்த அவர் இன்று அதிகாலை 1 மணி அளவில் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.
அதிகாலை 3 மணி அளவில் அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார், தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, வசந்தகுமார் எம்.பி., ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் டி.என்.பிரபாகர், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து, வி.ஜி.சந்தோசம் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், அன்பழகனின் இறுதி ஊர்வலம் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாலை 4.15 மணி அளவில் புறப்பட்டு நியூ ஆவடி ரோட்டில் உள்ள வேலங்காடு மின்மயானத்தில் பேராசிரியர் க.அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். கி.வீரமணி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, பொன்முடி உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடலை பார்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு திமுகவின் கொடி போர்த்தப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 2.கி.மீ தூரம் நடந்தே வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் மறைந்த தலைவருக்கு பிரியாவிடை அளித்தனர்.
மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர், தொண்டர்கள் மாற்று கட்சியினர் பங்கேற்று மறைந்த தலைவருக்கு பிரியாவிடை அளித்தனர். அன்பழகனின் இறுதி ஊர்வலத்தில் வழிநெடுக திமுகவினா் முழக்கம் இட்டவாறே வந்தனர்.
'நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு' எனும் குறளுக்கேற்ப கலைஞர் அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் நட்பு பாராட்டியவர் பேராசிரியர் பெருந்தகை என்றால் மிகையல்ல.
Related Tags :
Next Story