அரசியல் கொள்கைகளில் உறுதியுடன் இருந்த அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு; எடப்பாடி பழனிசாமி இரங்கல்
அரசியலில் கொள்கைகளில் இருந்து விலகாமல் உறுதியுடன் இருந்த க.அன்பழகனின் மறைவு, தமிழகத்துக்கு பேரிழப்பு என்று தனது இரங்கல் செய்தியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7-ந் தேதி (நேற்று) அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
க.அன்பழகன் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளில் இருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர்.
தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் க.அன்பழகன். அவர் 1957-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக முதன் முறையாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அடியெடுத்து வைத்தார். 43 ஆண்டுகளாக தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து வந்தார்.
ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர். அவர் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.
தி.மு.க.வின் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க. கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story