தமிழகத்துக்குள்ளும் நுழைந்தது: ஓமனில் இருந்து திரும்பிய காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு கொரோனா பாதிப்பு
ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னை அரசு மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை,
சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அந்த நாட்டை மட்டுமின்றி அகில உலகையும் பெரும் அல்லலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த அடிப்படையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் டெல்லி, தெலுங் கானா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் இத்தாலியில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் என 31 பேர் நேற்று முன்தினம் வரை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருந்தனர். அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க என்ஜினீயர் ஒருவர் கடந்த 27-ந்தேதி சொந்த ஊர் வந்தார். அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த 4-ந்தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக கிண்டி கிங்ஸ் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்தபோது, அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை அறிந்த மருத்துவக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பிரத்யேக பாதுகாப்புகளுடன் ஆம்புலன்ஸ் மூலம் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு கொரோனாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு பாதுகாப்பு உபகரணங்கள் அணிவிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அவருடைய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களை கண்காணிக்க மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவர் களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா? என்றும், அவ்வாறு இருந்தால் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் என்ஜினீயர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி சக நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற செய்தி நேற்று முன்தினம் வரை தமிழக மக்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் காஞ்சீபுரம் என்ஜினீயர் பாதிக்கப்பட்டு இருப்பதன்மூலம் தமிழகத்துக்குள்ளும் கொரோனா வைரஸ் நுழைந்து விட்டது என்ற அதிர்ச்சிகரமான தகவல் மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதற்கிடையே லடாக்கை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஈரான் சென்று வந்த இவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 3 பேரையும் சேர்த்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே கொரோனா பாதித்த 2 அமெரிக்கர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருந்தது தெரியவந்தது. அந்த இடங்களில் அவர்களுடன் பழகியவர்கள் சுமார் 150 பேர் தனி முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story