தி.மு.க. பொது செயலாளர் மறைவு; இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் நன்றி


தி.மு.க. பொது செயலாளர் மறைவு; இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் நன்றி
x
தினத்தந்தி 8 March 2020 4:33 PM GMT (Updated: 8 March 2020 4:33 PM GMT)

தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல் அமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து கொண்டார்.

சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் (வயது 98), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மரணம் அடைந்தார்.  இதையடுத்து அவரது உடல் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்ட சாலையில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டது. அவருடைய உடலில் தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அன்பழகன் உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் அன்பழகன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.  இதேபோன்று அன்பழகன் மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து கொண்டார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இரங்கல் அறிக்கை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி. அன்பழகன் உடலுக்கு நேரில் மரியாதை செலுத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சருக்கும் நன்றி.  தி.மு.க. தோழமை கட்சியினர் மற்றும் பலதுறைகளை சார்ந்த சான்றோர்களுக்கும் கண்ணீர் கலந்த நன்றி.

தி.மு.க.வின் வெற்றியை கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் காணிக்கையாக்கிடுவோம், இது உறுதி. தி.மு.க.வை வழிநடத்தும் தலைமைக்குரிய ஆற்றல் என்னிடம் உள்ளதாக அன்பழகன் வாழ்த்தினார். அன்பழகன் கூறியதை அவர் வைத்த தேர்வில் தேறிய மாணவன், பெற்ற சான்றிதழாக கருதினேன். அப்பாவையும், பெரியப்பாவையும் இயற்கை பறித்துக்கொண்ட சதியால் தனிப்பட்ட வகையில் கலங்கி நிற்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது.  முதல் நாளில், மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான கே.பி.பி. சாமி, காத்தவராயன் மற்றும் அன்பழகன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

Next Story