மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை,
தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) காலியாகின்றன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வேட்புமனு 6-ந்தேதி தொடங்கியது. 13-ந்தேதி பிற்பகல் 3 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் ராமன் நகரைச் சேர்ந்த கு.பத்மராஜன் சுயேச்சையாக முதல் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமரையைச் சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன் என்பவரும் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு விவரங்கள், ஆவணங்கள் அனைத்தும், சட்டசபை செயலகத்தின் இணையதளத்திலும், சட்டசபை விளம்பரப்பலகையிலும் உடனடியாக வெளியிடப்படுகின்றன.
இந்தநிலையில், நேற்று தி.மு.க. வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்காக அவர்கள் நேற்று பிற்பகல் சட்டசபை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசனின் அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்களுடன் தி.மு.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, தி.மு.க. கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, சேகர்பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்பட பலர் வந்திருந்தனர்.
திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் முறையே வேட்புமனு, சொத்து பட்டியல் மற்றும் டெபாசிட் தொகை ஆகியவற்றை கி.சீனிவாசனிடம் வழங்கினர். அவற்றை கி.சீனிவாசன் பெற்றுக்கொண்டார். வேட்புமனுவை தாக்கல் செய்ததும் 3 பேரும் உறுதிமொழி வாசித்தனர்.
பின்னர் வேட்புமனு தாக்கலுக்காக வந்த 3 வேட்பாளர்கள் மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் அனைவரும், அடுத்த அலுவலக அறையில் இருந்த சபாநாயகர் ப.தனபாலை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் தங்கள் தரப்பில் காட்டியுள்ள சொத்து விவரம் வருமாறு:-
திருச்சி சிவா:- சட்டம் படித்துள்ள இவர், தன்னிடம் ஒரு கோடியே 60 லட்சத்து 94 ஆயிரத்து 537 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் (கார், நகை, பணம் உள்ளிட்டவை), மனைவி (இறந்துவிட்டார்) பெயரில் ரூ.37.65 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளதாக கூறி இருக்கிறார்.
மேலும் தனது பெயரில் 2 கோடியே 62 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.20.50 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். அதே நேரத்தில் ரூ.25 லட்சம் கடன் உள்ளதாக கூறியுள்ளார்.
அந்தியூர் செல்வராஜ்:- இவர் தனது பெயரில் 33 லட்சத்து 32 ஆயிரத்து 350 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 437 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.
தனது பெயரில் ரூ.68.50 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.83.50 மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாக காட்டியிருக்கிறார். 8-ம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், விவசாயம், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியுள்ள அந்தியூர் செல்வராஜ், தன் மீது குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு ரூ.3.10 லட்சமும், மனைவிக்கு ரூ.1.84 லட்சமும் கடன் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
என்.ஆர்.இளங்கோ:- இவர், சட்டம் படித்து வக்கீலாக தொழிலாற்றும் தன்னிடம் ஒரு கோடியே 81 லட்சத்து 15 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், தனது மனைவி பெயரில் 45 லட்சத்து 54 ஆயிரத்து 938 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் தனது பெயரில் ரூ.3.10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாகவும், ரூ.1.51 கோடி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலுக்கு தி.மு.க. 3 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. அ.தி.மு.க.வும் 3 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. எனவே 6 காலியிடங்களுக்கும் 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருக்கும் நிலையில், போட்டியின்றி 6 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.
எனவே, இந்த தேர்தலில் 26-ந்தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பில்லை. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான இறுதி நாளான 18-ந்தேதியன்றே 6 பேருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதை டெல்லிக்கு கொண்டு சென்று அங்கு எம்.பி.யாக 6 பேரும் பதவி ஏற்பார்கள்.
Related Tags :
Next Story