திட்டக்குழு துணை தலைவராக பொன்னையன் நியமனம்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளில் அமைச்சராக இருந்தவர்
மாநில திட்டக்குழு துணை தலைவராக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளின்போது அமைச்சராக பணியாற்றிய பொன்னையன் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை,
மாநில திட்டக்குழு என்பது முதல்-அமைச்சர் கீழ் இயங்கும் குழு ஆகும். முன்னுரிமை இனங்களில் தமிழக அரசுக்கு ஆலோசனை கூறும் வகையில் மாநில திட்டக்குழு துணை தலைவரை நியமிப்பது தேவையான ஒன்றாக கருதப்படுகிறது.
எனவே தமிழக அரசின் மாநில திட்டக்குழு துணை தலைவராக சி.பொன்னையனை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேற்கண்டவாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்துவரும் சி.பொன்னையன் (வயது 79), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை திருச்செங்கோட்டிலும், கல்லூரி படிப்பை திருச்சியிலும், சட்டப்படிப்பை சென்னையிலும் முடித்தார். 1958-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்து அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.
தி.மு.க.வில் சட்டப்பிரிவு மற்றும் மாணவர் பிரிவுகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டம், சட்ட நகல் எரிப்பு போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை தண்டனை அனுபவித்து இருக்கிறார்.
எம்.ஜி.ஆர். மீதான பற்றுதல் காரணமாக அ.தி.மு.க.வில் இணைந்தார். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க. கட்சி தொடங்கும் பணிகளில் கே.ஏ.மதியழகன், ஜஸ்டிஸ் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையிலான குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார். சர்காரியா கமிஷனிலும் அ.தி.மு.க. சார்பில் வக்கீலாக பணியாற்றி இருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சட்டத்துறை, தொழில்துறை, கூட்டுறவுத்துறை, கல்வித்துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையிலும் சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதி அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் ஜெயலலிதா ஆட்சியின்போது அவை முன்னவராகவும், அவைத்தலைவராகவும், அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story