மலையாள நடிகை ஜெயபாரதி வீட்டில் நகை திருடியது எப்படி? - கைதான நேபாள காவலாளி பரபரப்பு வாக்குமூலம்


மலையாள நடிகை ஜெயபாரதி வீட்டில் நகை திருடியது எப்படி? - கைதான நேபாள காவலாளி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 March 2020 3:45 AM IST (Updated: 11 March 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

மலையாள நடிகை ஜெயபாரதி வீட்டில் நகை திருடியது எப்படி? என்பது குறித்து கைதான நேபாள காவலாளி பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

சென்னை, 

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயபாரதி, சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் அவென்யூவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள லாக்கரில் இருந்து 31 பவுன் தங்க நகைகள் திருட்டு போய்விட்டதாக, கடந்த 7-ந்தேதி நுங்கம்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் தர்மராஜன் ஆகியோர் மேற்பார்வையில், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

புகார் கொடுத்த சில மணி நேரத்தில், நடிகை ஜெயபாரதி வீட்டில் நகை திருடியதாக அவரது வீட்டு காவலாளி பகதூர் என்ற ஹரிக்குமார் (வயது 25), கார் டிரைவர் இப்ராகீம் (50) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். பகதூர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். இப்ராகீம், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். திருடிய நகைகளை அடகு கடை அதிபர் ஒருவரிடம் விற்றுவிட்டனர். போலீசார் அந்த நகைகளை மீட்டனர். திருடப்பட்ட நகைகளில் 21 பவுனில் செய்யப்பட்ட தங்க கொலுசுகளும் அடங்கும். இந்த நகைகள் நடிகை ஜெயபாரதியின் நகைகள் ஆகும்.

கைதான இருவரும் நீதிமன்ற காவலில் நேற்று முன்தினம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகை ஜெயபாரதியின் நகைகளை திருடியது எப்படி? என்பது குறித்து கைதான காவலாளி பகதூர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் நடிகை ஜெயபாரதி வீட்டில் கடந்த 1 வருடமாக வேலை செய்தேன். வீட்டு காவல் பணி மட்டும் அல்லாமல், தோட்ட வேலை மற்றும் வீட்டில் இதர வேலைகள் அனைத்தையும் செய்வேன். என்னை நம்பிக்கையாக வேலைக்கு வைத்திருந்தனர். வீட்டின் அனைத்து அறைகளுக்கும் நான் செல்வேன்.

எனக்கு நிறைய கடன் இருந்தது. கடனை அடைக்க முடியாமல் தவித்தேன். இந்த நேரத்தில் இப்ராகீம் தற்காலிக டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். அவர்தான் ஜெயபாரதி வீட்டில் பெரிய அளவில் நகைகள் இருக்கும். அந்த நகைகளை நைசாக திருடிக்கொண்டு வா, அவற்றை விற்று பணமாக்கி விடலாம். உனது கடனை அடைத்து விடலாம். பெரிய அளவில் இருக்கும் நகைகளில் சிறிதளவு திருடினால் தெரியாது. திருடிவிட்டு நீ நேபாளம் சென்றுவிட்டால், உன்னை பிடிக்க முடியாது. நானும் உன்னை காட்டி கொடுக்க மாட்டேன் என்று இப்ராகீம், எனக்கு ஆசை காட்டினார்.

சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடிகை ஜெயபாரதியின் மகனுக்கு திருமணம் நடந்தது. திருமண கோலாகலத்தில் நான் வீட்டுக்குள் சர்வசாதாரணமாக நடமாடினேன். ஜெயபாரதி அவர் அணிந்திருந்த நகைகளை, திருமண நிகழ்ச்சி முடிந்ததும், வீட்டுக்குள் இருந்த லாக்கரில் வைத்தார். லாக்கரை அவர் சரியாக பூட்டவில்லை.

இதை பயன்படுத்தி லாக்கரை திறந்து கையில் கிடைத்த சில நகைகளை மட்டும் நைசாக எடுத்துக்கொண்டேன். ஆனால் நகை திருட்டு போனது பற்றி நடிகை ஜெயபாரதிக்கு எதுவும் தெரியவில்லை. திருடிய நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை நானும், இப்ராகீமும் பங்கு போட்டு கொண்டோம். நகை திருடி 3 மாதங்கள் ஆகியும், ஜெயபாரதி கண்டுபிடிக்கவில்லை. நகை திருட்டில் கிடைத்த பணத்தில் எனக்கிருந்த கடனை அடைத்து விட்டேன்.

எப்படியாவது ஒரு நாள் விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்று பயந்தேன். இதனால் கடந்த வாரம் எனது தம்பிக்கு உடல் நலம் சரி இல்லை என்று கூறி, நேபாளம் செல்வதாக கூறி நான் வேலையை விட்டு நின்று விட்டேன். ஆனால், நான் நேபாளம் செல்லாமல், தியாகராயநகரில் எனது தந்தையுடன் தங்கி இருந்தேன்.

ஆனால் ஒரு சின்ன தவறு செய்தேன். என்னுடன், ஜெயபாரதி வீட்டில் வேலை செய்த இன்னொரு ஊழியரிடம் மட்டும் நான் ஊருக்கு போகவில்லை என்று கூறி இருந்தேன். இந்த நிலையில் நகை திருட்டு போனதை கண்டுபிடித்து போலீசில் புகார் கொடுத்துவிட்டனர். இன்னொரு ஊழியர் மூலமாக நான் ஊருக்கு போகாததை தெரிந்து கொண்ட போலீசார், அந்த ஊழியர் மூலம் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு பகதூர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். திருட்டுபோன நகையை உடனடியாக மீட்டு கொடுத்த தனிப்படை போலீசாருக்கு, நடிகை ஜெயபாரதி நன்றி தெரிவித்தார்.

Next Story