கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி எதிரொலி: கோழிக்கறி விலை கிலோ ரூ.60 ஆக சரிந்தது
கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி எதிரொலியாக கோழிக்கறி விலை கிலோ ரூ.60 ஆக சரிந்துள்ளது.
சென்னை,
அசைவ உணவு பிரியர்களின் பட்டியலில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பது கோழி இறைச்சி என்று சொன்னால் அது மிகையல்ல. கோழிக்கறி மூலம் செய்யப்படும் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் கிரேவி உள்பட பல்வேறு உணவுகளுக்கு அசைவ பிரியர்களிடம் எப்போதும் தீராத மோகம் உண்டு. இதுதவிர ஆட்டு இறைச்சி மற்றும் மீன்களை விடவும், விலை குறைவு என்பதால் பல்வேறு தரப்பட்ட மக்களும் கோழிக்கறியை விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள்.
வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமையன்று அசைவ உணவு வகைகளை சாப்பிட்டே தீரவேண்டும் என்ற எழுதப்படாத விதி தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதனால் ஒரு சிலரை தவிர்த்து, பெரும்பாலான அசைவ பிரியர்கள் இறைச்சி மற்றும் மீன் வகைகள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் பீதியால் கடந்த சில நாட்களாக அசைவ உணவுகளுக்கு விடுமுறை கொடுத்து, சைவ உணவுகளையே சிலர் விரும்பி சாப்பிடுகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் கோழிக்கறியையும் விட்டுவைக்கவில்லை. கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சிலர் வதந்தியை கிளப்பிவிட்டார்கள். இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், கேரளாவில் பரவிய பறவை காய்ச்சல் அதற்கு மேலும் வலு சேர்த்தது. இதனால் கோழிக்கறி வாங்குவதை பெரும்பாலானோர் தவிர்த்தனர். எப்போதாவது கோழிக்கறி வாங்குபவர்களும் கூட கோழி இறைச்சி கடை பக்கம் தலை வைத்து படுக்கவில்லை.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சி மளமளவென சரிந்து ரூ.60-ஐ அடைந்திருக்கிறது. இந்த விலைக்கு கூட கோழி இறைச்சியை வாங்குவதற்கு யாரும் முன்வருவது இல்லை. இதனால் இறைச்சி வியாபாரிகள் சிலர், கோழி இறைச்சி வாங்கினால் முட்டைகள் இலவசம் என்பது உள்ளிட்ட சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு பார்த்தும் பிரயோஜனம் கிடைக்கவில்லை.
கொரோனா வைரஸ் பீதியால் கோழிக்கறி நுகர்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தாததால், சாலையோரங்களில் தள்ளுவண்டிகளில் வைத்து சிக்கன் பக்கோடா விற்பனை செய்யும் சிலர் தங்களுடைய கடைகளையே மூடிவிட்டு சென்றுவிட்டனர். கோழி இறைச்சி விலை வீழ்ச்சியடைந்தாலும் பெரும்பாலான ஓட்டல்களில் சிக்கன் பிரியாணி விலையை குறைக்காமல் பழைய விலைக்கே விற்பனை செய்வதாக பிரியாணி பிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோழி இறைச்சியை போன்று கோழி முட்டை விலையும் கணிசமாக குறைந்துள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு முட்டை நேற்று 4 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் கோழிக்கறியால் பரவுவதாக ஏற்பட்டுள்ள பீதி மக்கள் மனதில் இருந்து நீங்கும் வரையிலும் கோழிக்கறி நுகர்வு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோழிக்கறி குறித்து சமூக வலைத்தளங்களில் ‘மீம்ஸ்’ பரப்பிய வலைத்தளவாசிகள் இப்போது தொடர்ந்து விலை உச்சத்திலேயே இருக்கும் ஆட்டுக்கறி மற்றும் வஞ்சிரம் மீனையும் கொரோனா வைரசுடன் இணைத்து மீம்ஸ் பரப்ப தொடங்கி இருக்கிறார்கள். இந்த ‘மீம்ஸ்’கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. இதுபோன்ற ‘மீம்ஸ்’கள் அசைவ பிரியர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் ‘கிலி’ ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story