அரசு கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் - சட்டசபையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு
அனைத்து அரசு கல்லூரிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் பலர் விவாதித்தனர். அவர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்தார். பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-
அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களிலும் மகளிர் பாதுகாப்பு வசதி மையம் நிறுவப்படும்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில், பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் தாவர நெகிழி பயன்பாட்டு மையம் நிறுவப்படும். அங்கு தமிழ்த்தொன்மை, பண்பாடு மற்றும் வரலாற்று மையம் தோற்றுவிக்கப்படும்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் அழிவின் விளிம்பில் இருக்கும் தாவர இனங்களை பாதுகாக்க பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பூங்கா நிறுவப்படும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 300 கணினிகளுடன் கூடிய மொழி ஆய்வகம் ஏற்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் நிர்வாகத்தில் மின் ஆளுமை நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.
முன்னதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதில் உரையில் கூறியதாவது:-
இந்தியாவிலேயே உயர்கல்வியில் ஆசிரியர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளது. தமிழக உயர்கல்வியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 993 பேர் பணியில் உள்ளனர். இவர்களில் 95,560 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,060 விரிவுரையாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2,331 உதவிப்பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆசிரியர் மாணவர் விகிதம் இந்திய அளவில் சராசரியாக 18:1 ஆகும். தமிழ்நாட்டில் 15:1 ஆக உள்ளது. அதாவது 15 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பலவகைத் தொழில் நுட்பக்கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் வழங்கப்படுகிறது.
அறிவியல், மனிதநேயம், மாணவர் நலன் இவற்றில் தீவிரம் காட்டும் வல்லுனர்களுக்கு ரூ.5 லட்சம், 8 கிராம் தங்க பதக்கத்துடன் “டாக்டர் அப்துல்கலாம் விருது” ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது.
பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் 100 மாணாக்கர்கள் 15 நாட்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று இப்பயிற்சியினை பெறுவதற்கும் ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “சகுரா” மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் ஜப்பான் நாட்டு அறிவியல் ஆய்வுக் கூடங்களை 2019-ம் ஆண்டு 15 மாணவர்கள் கண்டு வந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story