கொரோனா ஒழிப்பு போரில் மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றி - டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்
கொரோனா ஒழிப்பு போரில் மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் குறித்த இன்றைய சூழல் அச்சப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனாலும் இது நம்பிக்கை இழக்க வேண்டிய தருணம் அல்ல. 20-வது நூற்றாண்டிலும், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியாவை தாக்கிய ஏராளமான பெரும் தொற்று நோய்களை நாம் திறம்பட சமாளித்து வெற்றி கண்டிருக்கிறோம். இப்போது கொரோனா வைரசை ஒழிக்க 21 நாள் ஊரடங்கில் மக்களின் உறுதியான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்காகத்தான் அரசு உங்களிடம் மன்றாடுகிறது.
ஆனால், அதற்கு தேவையான ஒத்துழைப்பு மக்களிடமிருந்து முழுமையாக கிடைக்கவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமளிக்கிறது. மக்களின் ஒத்துழைப்பு என்ற மருந்து முழுமையாக கிடைக்காதவரை, கொரோனாவை விரட்ட முடியாது. ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அவை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிக் கொண்டிருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கொரோனா ஒழிப்பு என்பது மாபெரும் போர். அதற்கு மக்கள் ஆதரவு முழுமையாக இருந்தால் உடனடியாக வெற்றி கிடைக்கும். அரைகுறையாக இருந்தால் வெற்றி தாமதமாகும். இதை உணர்ந்து கொண்டு கொரோனா ஒழிப்பு போருக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story