அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் - போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கு உத்தரவின்போது, அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் பொதுமக்களிடம் தமிழக போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக வரும் ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதேநேரம், இந்த ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் பால், காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் நேரக்கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளில் நடமாடுபவர்களையும், மோட்டார் சைக்கிள்களில் செல்வோரையும் போலீசார் லத்தியால் கண் மூடித்தனமாக அடித்தும், நூதன முறைகளில் தண்டனை வழங்கியும் துன்புறுத்தி வருகின்றனர். எனவே ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் காரணமின்றி சாலைகளில் நடமாடும் பொதுமக்களை அடித்து துன்புறுத்தக்கூடாது என தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக அவசர வழக்காக விசாரித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் தரப்பில் சில புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டாலும், அந்த சம்பவம் மற்றும் போலீசாரின் அத்துமீறல் குறித்து குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை. பொதுவான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். எனவே, இவற்றின் அடிப்படையில் தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு எந்த ஒரு உத்தரவுகளையும் பிறப்பிக்க விரும்பவில்லை.
அதேநேரம், தமிழக போலீசாரும் இந்த விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கொரோனா வைரஸ் என்பது உலகில் விந்தையான பிரச்சினையாக திகழ்கிறது.
நம் நாடும், நம் நாட்டு மக்களும் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். எனவே, தமிழக போலீசார் இந்த விவகாரத்தில், அனுதாபத்துடன், சீரான நடவடிக்கை மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story