கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம்: கவர்னருடன், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு - தமிழக அரசின் முன்னேற்பாட்டுக்கு பாராட்டு
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் விளக்கம் அளித்தார். தமிழக அரசின் முன்னேற்பாட்டுக்கு கவர்னர் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை,
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசுவதற்காக சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு காரில் வந்தார். அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி ஆகியோரும் உடன் சென்றனர்.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்புக்கு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சிகிக்சைக்கான ஏற்பாடுகள் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் விளக்கம் அளித்தார். மேலும் அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து அறிக்கை ஒன்றையும் அவரிடம் கொடுத்தார். அப்போது, தமிழக அரசின் முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்தார்.
பின்னர், கவர்னரிடம் விடைபெற்றுக்கொண்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story