சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், இஞ்சி, உருளைக்கிழங்கு விலை உயர்வு - விற்பனை குறைவால் வியாபாரிகள் கவலை


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், இஞ்சி, உருளைக்கிழங்கு விலை உயர்வு - விற்பனை குறைவால் வியாபாரிகள் கவலை
x
தினத்தந்தி 1 April 2020 3:15 AM IST (Updated: 1 April 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், இஞ்சி, உருளைக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது, அதேவேளை வரத்து இருந்தும் சரிவர விற்பனை நடப்பதில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், சென்னை கோயம்பேடு மார்க்கெட் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படுகிறது.

சமூக விலகலை கடைப்பிடிக்கும் நோக்கம் காரணமாக சில்லறை வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மட்டுமே மார்க்கெட்டுக்கு சென்று வர முடிகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் சில காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ரூ.24-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் தற்போது ரூ.26-க்கு விற்பனையாகிறது. ரூ.22-க்கு விற்பனையான உருளைக்கிழங்கு ரூ.27-க்கும், ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்ட முள்ளங்கி ரூ.25-க்கும் விற்பனையாகிறது.

இஞ்சியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.70-க்கு விற்பனையான ஒரு கிலோ இஞ்சி தற்போது ரூ.120-க்கும், ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்ட சாம்பார் வெங்காயம் தற்போது ரூ.75 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எஸ்.முத்துக்குமார் கூறுகையில், ‘அண்டை மாநிலங்களிலிருந்து காய்கறி ஏற்றிவரும் லாரி டிரைவர்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக தயங்குகிறார்கள். இதனால் குறிப்பிட்ட சில காய்கறிகள் விலை மட்டும் உயர்ந்துள்ளது. மற்றபடி காய்கறி விலையில் மாற்றம் இல்லை. வரத்து சரியாக இருந்தும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் முந்தைய வியாபாரம் இல்லை’ என்றார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு: (கிலோவில்)

பல்லாரி வெங்காயம் ரூ.26, உருளைக்கிழங்கு ரூ.27, கேரட் ரூ.20 வரை, பீன்ஸ் ரூ.30 முதல் ரூ.35 வரை, நூக்கல் ரூ.8, சவ்சவ் ரூ.13, பீட்ரூட் ரூ.12 வரை, முட்டைகோஸ் ரூ.9, பச்சை மிளகாய் ரூ.10 வரை, இஞ்சி ரூ.120, சேனைக்கிழங்கு ரூ.18, சேப்பங்கிழங்கு ரூ.35, கத்தரிக்காய் ரூ15, வெண்டைக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.25 முதல் ரூ.30 வரை, கோவைக்காய் ரூ.12, கொத்தவரங்காய் ரூ.20, பாகற்காய்(பன்னீர்) ரூ.30, பாகற்காய்(பெரியது) ரூ.12, முருங்கைக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.25, வெள்ளரி ரூ.15, புடலை ரூ.12, தக்காளி ரூ.12 வரை, காலிபிளவர்(ஒன்று) ரூ.15, பீர்க்கங்காய் ரூ.25, சுரைக்காய் ரூ.10, சாம்பார் வெங்காயம் ரூ.75 முதல் ரூ.80 வரை, தேங்காய் ரூ.50 வரை, வாழைக்காய் ரூ.7, கீரைக்கட்டு ரூ.5.

Next Story