கொரோனா நிவாரண உதவித்தொகை: குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்படி வினியோகிக்க வேண்டும்? - கூட்டுறவுத்துறை விளக்கம்


கொரோனா நிவாரண உதவித்தொகை: குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்படி வினியோகிக்க வேண்டும்? - கூட்டுறவுத்துறை விளக்கம்
x
தினத்தந்தி 1 April 2020 8:45 PM GMT (Updated: 1 April 2020 8:35 PM GMT)

கொரோனா நிவாரண உதவித்தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்படி வினியோகிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை, 

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.1,000-ம், குடும்ப அட்டைக்கு தகுதியுள்ள ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்படும். கொரோனா நிவாரண உதவித்தொகை, பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நடைமுறையிலேயே வழங்கப்படும்.

நிவாரண உதவித் தொகை, அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை 2-ந்தேதி முதல் (இன்று) பொதுமக்களுக்கு வினியோகம் செய்யவேண்டும். கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், மலைப்பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையேற்படின் வீடுகளுக்கு சென்று வழங்கலாம்.

பணத்தை உறையில் (கவரில்) வைத்து வழங்கக்கூடாது. நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படவேண்டும். வழக்கமான பணிநேரத்தில் அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்குவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நியாயவிலைக் கடை பணியாளர்கள் முக கவசமும், கையுறையும் அணிந்திருக்க வேண்டும். அதேபோல், கிருமிநாசினி திரவமும் கடைகளில் வைக்கப்பட்டு இருக்கவேண்டும். கடை பணியாளர்களும், பொதுமக்களும் அதை பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கி நிற்பதை தவிர்க்கும்விதமாக சமூக விலகல் நடைமுறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும். குடும்ப அட்டைதாரர்களை, கட்டுப்பாடற்ற பொருட்கள் வாங்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story