தனியார் பள்ளிகளின் கட்டண வசூலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் - தொல்.திருமாவளவன் கோரிக்கை
தனியார் பள்ளிகளின் கட்டண வசூலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருவது கவலையளிக்கிறது. இதன் சமூக பரவலைக் கட்டுப்படுத்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருந்து கட்டுப்பாடு காக்கவேண்டிய நேரம் இது. எனவே அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்று தமிழக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
21 நாள் ஊரடங்கு வெற்றி பெற வேண்டுமெனில் மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரணங்கள் மக்களை சரியாக சென்றடைய வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய நலனுக்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு இன்னும் அதிகமாக செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு மத்திய-மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை முன்கூட்டியே கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. வங்கிகளில் கடன் தவணைகளை ஒத்திவைத்துள்ள நிலையில் தனியார் பள்ளிகள் கட்டண வசூலில் ஈடுபடுவது முறையல்ல. எனவே தனியார் பள்ளிகளின் கட்டண வசூலை மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைக்குமாறு தமிழகக் கல்வித்துறை அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story