கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் சிறுசேமிப்புக்கான வட்டியை குறைப்பதா? - தமிழக காங்கிரஸ் கண்டனம்
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் சிறுசேமிப்புக்கான வட்டியை குறைப்பதா என்று தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி வேலைவாய்ப்பை இழந்து வருமானத்தை பறிகொடுத்து வாழ்வாதாரத்திற்காக கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் மக்களை துன்புறுத்துகிற வகையில் அமைந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த 7.9 சதவீத வட்டி 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது. அதேபோன்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
பொது வருங்கால வைப்புநிதி, சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டியும் பாதுகாப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் இத்தகைய திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கிறார்கள். அந்த நம்பிக்கையை சீர்குலைக்கும் பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story