தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு
x
தினத்தந்தி 3 April 2020 11:43 AM GMT (Updated: 3 April 2020 11:43 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வடைந்து உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  நாட்டில் கடந்த மார்ச் 24ந்தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அன்று நள்ளிரவு முதல் வரும் 14ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.  இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வருவது தவிர்க்கப்படுகிறது.

எனினும், கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  தமிழகத்தில் கடந்த மார்ச் 30ந்தேதி வரை 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் கடந்த 31ந்தேதி காலை கூடுதலாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 71 ஆக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி நிஜாமுதீனில் மார்ச் 8ந்தேதி முதல் மார்ச் 20ந்தேதி வரை நடந்த தப்லிக் மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.  இதில், அவர்களில் பலருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, டெல்லி மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பியவர்களிடம் நடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 31ந்தேதி தெரிவித்தது.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக அதிரடியாக உயர்ந்தது.

இந்நிலையில், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் கடந்த 1ந்தேதி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கொரோனா பாதித்தவர்களில் வீட்டு கண்காணிப்பில் 77,330 பேர் உள்ளனர்.  அரசின் முகாம்களில் 81 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,103 பேர் அவர்களாகவே முன்வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 658 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன.  மீதமுள்ளவர்களுக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவர்களுக்கு ஏப்ரல் 2ந்தேதி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 19 மாவட்டங்களை சேர்ந்த 190 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் தமிழகத்தினை சேர்ந்த 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து அவர், 1,103 பேர் இருந்த இடங்களை சுற்றியுள்ள பகுதிகளை தனிமைப்படுத்தவும், அந்த பகுதியில் வசிப்போரை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அவர்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேருக்கும் பரிசோதனை நடந்து உள்ளது.  இதில், தமிழகத்தில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுவரை வீட்டு கண்காணிப்பில் 86,342 பேர், அரசின் கண்காணிப்பில் 90 பேர் உள்ளனர் என கூறினார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234ல் இருந்து 309 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 102 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதுவரை 3 ஆயிரத்து 684 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர்.  484 பேருக்கு முடிவுகள் தெரிய வேண்டி உள்ளது.  1,580 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.

Next Story