தமிழகத்தில் கைது எண்ணிக்கை 57 ஆயிரமாக உயர்வு: ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை - போலீசார் எச்சரிக்கை


தமிழகத்தில் கைது எண்ணிக்கை 57 ஆயிரமாக உயர்வு: ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை - போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 April 2020 10:15 PM GMT (Updated: 3 April 2020 8:50 PM GMT)

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இனிமேல் போடப்படும் வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான சட்டம் பாயும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் அந்த உத்தரவை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுகிறார்கள். கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இனிமேல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வரை ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 188 (அரசு அதிகாரிகள் உத்தரவை மீறுதல்) மற்றும் 269 (அஜாக்கிரதையாக செயல்பட்டு, நோயை பரப்புதல்) ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் சாதாரண நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டது. இந்த சட்டப்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 1 மாதம் முதல், அதிகபட்சம் 6 மாதங்கள் வரை மட்டுமே தண்டனை கிடைக்கும்.

மத்திய அரசு உத்தரவின்படி இனிமேல் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 270 (நோய் பரவும் என்று தெரிந்தே செயல்படுதல்) மற்றும் பேரழிவு மேலாண்மை சட்டப்பிரிவுகள் 50 மற்றும் 60-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.

இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் ஊர் சுற்றுவதை தவிர்த்துவிட்டு, ஊரடங்கு உத்தரவை மதித்து, வீடுகளில் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 49 ஆயிரத்து 303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 54 ஆயிரத்து 817 பேர் கைது செய்யப்பட்டனர். 40 ஆயிரத்து 903 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 17 லட்சத்து 2 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

நேற்று இரவு நிலவரப்படி கைது எண்ணிக்கை 57 ஆயிரத்தை தொட்டதாக போலீசார் கூறினார்கள்.

Next Story