கொரோனாவின் வீரியத்தை சிலர் புரிந்து கொள்ளவில்லை; தேவை இல்லாமல் வெளியே சுற்றுகிறார்கள் ஊரடங்கு கடுமையாக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை


கொரோனாவின் வீரியத்தை சிலர் புரிந்து கொள்ளவில்லை; தேவை இல்லாமல் வெளியே சுற்றுகிறார்கள் ஊரடங்கு கடுமையாக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 April 2020 12:15 AM GMT (Updated: 3 April 2020 11:45 PM GMT)

கொரோனாவின் வீரியத்தை சிலர் புரிந்துகொள்ளாமல் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதாகவும், இதனால் ஊரடங்கை கடுமையாக்கும் நிலை ஏற்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வேலை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்களை ஆங்காங்கே அரசு தங்க வைத்து, உணவு வழங்கி வருகிறது.

சென்னை பெரியமேடு கண்ணப்பர் திடல், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சமூக நலக்கூடம், வேளச்சேரி குருநானக் கல்லூரி ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள வெளிமாநில தொழிலாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்தார்.

அப்போது அவர், ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி-சட்டை, லூங்கி, பெண் தொழிலாளர்களுக்கு சேலை மற்றும் சோப்பு, பற்பசை போன்ற பொருட்களை வழங்கினார். மேலும் அவர்களுக்கு தன் கையால் உணவு பரிமாறினார்.

சமூக இடைவெளியை பின்பற்றி வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் முதல்- அமைச்சரிடம் உதவிப் பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

அப்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், சென்னை கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

வேளச்சேரி குருநானக் கல்லூரியில் வெளிமாநில தொழிலாளர்களை சந்தித்த பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் பரவி இருக்கிறது. தமிழகத்தில் இந்த நோயின் தாக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன் கருதி அவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதிகளை அரசு செய்து வருகிறது.

அந்த வகையில் ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை முகாம்களில் தங்க வைத்து அரசு உதவி செய்து வருகிறது. மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் வெளிமாநில தொழிலாளர்களை நான் இன்றைய தினம் சந்தித்து பேசினேன்.

எத்தனை பேர்?

வெளிமாநில தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு தேவையான உதவிகளை அவர்களுக்கு செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வெளிமாநில பணியாளர்கள் 1,18,336 பேரும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 3,409 பேரும், ஓட்டல்களில் 7,871 பேரும், பண்ணைகளில் 4,953 பேரும் என மொத்தம் 1,34,569 பேர் பணியாற்றுகிறார்கள்.

இதேபோல் பிற மாநிலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 7,198 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய கோரி அந்தந்த மாநில அரசுகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் களும் வருமாறு:-

மளிகை பொருட்கள்

கேள்வி:- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டு உள்ளது. மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்: நிதி கேட்டு இருக்கிறோம். நமது கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கேள்வி:- தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதா?

பதில்:- அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வர எந்த தடையும் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் தமிழகத்துக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. தற்போதைய நிலையில் அந்தந்த மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் நிலவுகிறது. மேலும் லாரி டிரைவர்களும் அதிகம் செல்வதில்லை. இதனால் மளிகை பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல பிற மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். எனவே இந்த நெருக்கடி நிலைமை நிச்சயம் மாறும்.

வெளியே சுற்றுகிறார்கள்

கேள்வி:- ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர மறுக்கிறார்களே... கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படுமா?

பதில்:- 144 தடை உத்தரவு விதிக்க காரணமே சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். கொரோனா என்பது கொடிய தொற்று நோய். மற்ற நாடுகளில் இதன் தீவிரத்தை பார்க்கத்தான் செய்கிறோம். ஆனாலும் இந்த நோயின் வீரியம் புரியாமல் சிலர் வாகனங்களில் தேவை இல்லாமல் வெளியே சுற்றுகிறார்கள்.

இந்த நோய்க்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. தற்போது வரை நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்.

கடுமையாக்கப்படும்

இது மக்களை துன்புறுத்த போடப்பட்டுள்ள சட்டம் அல்ல. அனைவரின் பாதுகாப்புக்காக போடப்பட்ட சட்டம். இதை மனதில் கொண்டு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு உண்டு.

தினமும் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். ஒரு தடவை வெளியே சென்றாலும் ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

என்ன சொன்னாலும் சிலர் கேட்பது கிடையாது. ஆனால் இனி சட்டம் தன் கடமையை செய்யும். மக்கள் ஒத்துழைக்க தவறும் பட்சத்தில் 144 தடை உத்தரவையும், ஊரடங்கு நடவடிக்கையையும் இன்னும் கடுமையாக்குவதை தவிர வேறு வழி கிடையாது.

வரி வருவாய் பாதிப்பு

கேள்வி:- பிற மாநிலங்களில் உள்ள தமிழக தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதா?

பதில்:- பிற மாநிலங்களில் வேலை பார்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்யக் கோரி அந்தந்த மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசின் சார்பில் தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உரிய நிவாரண தொகையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

கேள்வி:- தற்போதைய சூழலில் அரசுக்கு ஏற்பட்டு இருக் கும் நிதி நெருக்கடி என்ன?

பதில்:- தற்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளும், பெரிய நிறுவனங்களும் இயங்கவில்லை. இதனால் அரசுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. போன்ற வரி வருவாய் வருவது கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே நேரம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை.

50 ஆயிரம் பேர் கைது

கேள்வி:- மளிகை பொருட் களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

பதில்:- இந்த புகார் தொடர்பாக வணிகர் சங்கங்களின் தலைவர்களுடன் அதிகாரிகள் குழுவினர் பேசி இருக்கிறார்கள். மளிகை பொருட் களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சங்கங்களின் தலைவர்கள் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள்.

கேள்வி:- சாலையோரம் வசிப்பவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யப்பட்டு உள்ளது?

பதில்: சாலையோரம் வசிப்பவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவை மீறிய பட்சத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 37,760 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. வதந்தி பரப்பியதாக 95 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கேள்வி:- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா?

பதில்:- ஏப்ரல் 14-ந் தேதி வரை மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

ரூ.1,000 சிறப்பு நிவாரணம்

கேள்வி:- துப்புரவு பணியாளர்கள் மற்றும் அம்மா உணவக ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுமா?

பதில்:- துப்புரவு பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள் தங்கள் பணியை சரிவர செய்து வருகிறார்கள். அவர்களின் வேலையே இதுதானே...

கேள்வி:- வெளியூரில் வசிப்பவர்கள் ரேஷன் பொருட் களை பெற முடியுமா?

பதில்:- ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் இந்த மாத இறுதிக்குள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இனி வீடு தேடி டோக்கன் வழங்கப்படும். அப்போதே ரூ.1000 சிறப்பு நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் பணியில் பத்திரிகைகள், ஊடகங்கள் சிறப்பாக செயலாற்றுகின்றன. எனவே பதிவு செய்யப்பட்ட, அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கு ரூ.3000 சிறப்பு தொகையாக வழங்கப்படும்.

கேள்வி:- சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு யார் மூலமாக தொற்று வந்தது என்பது முழுமையாக தெரியாமல் உள்ளதே?

பதில்:- அரசு விசாரித்து கொண்டு தான் இருக்கிறது. இதை பரவாமல் தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அரசு செய்து கொண்டு இருக்கிறது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Next Story