ஆவின் மூலம் ஏழை, எளியோருக்கு இலவசமாக பால் - பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்


ஆவின் மூலம் ஏழை, எளியோருக்கு இலவசமாக பால் - பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 April 2020 1:30 AM IST (Updated: 5 April 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

ஆவின் மூலம் ஏழை, எளியோருக்கு இலவசமாக பால் வழங்க முன் வரவேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக 100 சதவீத டீக்கடைகளும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மளிகை கடைகளும் மூடப்பட்டு விட்டதால் தற்போது தமிழகத்தில் பால் விற்பனை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக தனியார் பால் நிறுவனங்கள் வேறு வழியின்றி தங்களின் கொள்முதல் நிலையங்களுக்கும், தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடுகின்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதனால், பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பாலை ஆறுகளிலும், வயல் வெளிகளிலும் கொட்டுகின்ற நிலையை வீடியோ காட்சிகளில் பார்க்கும்போது சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களாகிய நாங்கள் எங்களது இதயத்தை கத்தி கொண்டு குத்திய வேதனையை அனுபவித்து வருகிறோம்.

ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருளான பாலை கர்நாடக அரசு தனது கூட்டுறவு நிறுவனமான நந்தினி பால் நிறுவனம் மூலம் உற்பத்தியாளர்களிடம் இருந்து தங்கு தடையின்றி கொள்முதல் செய்து அம்மாநில ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதன்காரணமாக பல லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து வருவதோடு, பொதுமக்களுக்கும் பால் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது.

எனவே தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய இயலாத பாலை தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்து அதனை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க முன் வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story