அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்கவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்கவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 April 2020 2:30 AM IST (Updated: 5 April 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசி உள்ளிட்ட உணவு பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் அருளரசு என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கூலி வேலை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள், டிரைவர்கள், குடும்ப அட்டை இல்லாதவர்கள் ஆகியோர் வேலையின்றி வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இவர் களுக்கு ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தார்கள்.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, ‘தமிழகத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்கள், குடும்ப அட்டை இல்லாதவர்கள் உள்ளிட்டோருக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் உள்ளிட்டவைகளை வழங்குவது குறித்து கடந்த மார்ச் 27-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த பொருட்கள் எல்லாம் மாவட்ட கலெக்டர் மூலமாக வழங்கப்படும்’ என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் வக்கீல் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ‘மாவட்ட கலெக்டரை அணுகி உணவு பொருட்களை வாங்க வேண்டும் என்ற நிபந்தனை கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேவையில்லாத சிரமத்தை வழங்கும். எனவே, குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு உணவு பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளிலேயே இவர்களுக்கும் உணவு பொருட்களை வழங்கவேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் அந்த உத்தரவில், ‘அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் குறித்த விவரங்களை தனி ஆவணமாக பராமரிக்கவேண்டும். இதுகுறித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் வகையில் இந்த உத்தரவின் நகலை தலைமைச் செயலாளருக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் உடனே வழங்கவேண்டும்.

எங்களது உத்தரவை முறையாக அமல்படுத்தப்பட்டதா? என்பது குறித்த நிலை அறிக்கையும், பதில் மனுவையும் வருகிற 9-ந்தேதி தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story