தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற கூட்டத்தில் டி.ஆர். பாலு பங்கேற்பு; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு


தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற கூட்டத்தில் டி.ஆர். பாலு பங்கேற்பு; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 April 2020 10:41 AM GMT (Updated: 5 April 2020 10:41 AM GMT)

தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற கூட்டத்தில் டி.ஆர். பாலு கலந்து கொள்வார் என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த மார்ச் 24ந்தேதி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அன்று நள்ளிரவு தொடங்கி வரும் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்வது தவிர்க்கப்படுகிறது.  கொரோனா பாதிப்பினை தவிர்ப்பது மற்றும் அதில் இருந்து தப்பித்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், வருகிற 8ந்தேதி (புதன்கிழமை) அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். நாடாளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் இருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் மோடி ஆலோசனை நடத்துகிறார். நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம், தொலைபேசியில் பேசி உடல்நலம் விசாரித்த பிரதமர் மோடி, தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி கேட்டு கொண்டார்.

இதனை அடுத்து, இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு கலந்து கொள்வார் என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story