ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் மின்சார தேவை 5 ஆயிரம் மெகாவாட் குறைந்தது - அமைச்சர் பி.தங்கமணி தகவல்
ஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழகத்தில் தினசரி மின்சாரத்தின் தேவை 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது என மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
சென்னை,
இதுகுறித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் தினசரி மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் நாளொன்றுக்கு 16 ஆயிரம் மெகாவாட்டாக இருக்க வேண்டிய மின்சாரத்தின் தேவை 5 ஆயிரம் மெகாவாட் அளவு குறைந்து, தற்போது 11 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது.
பிரதமர் அறிவிப்பை ஏற்று மின்விளக்குகள் நிறுத்தப்பட்டதன் மூலம் கிட்டத்தட்ட 1,500 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்வு காரணமாக, மின் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, நீர் மின்சார நிலையங்களில் 1,000 மெகாவாட்டும், எரிவாயு மின்சார நிலையங்களில் 100 மெகாவாட்டும், அனல் மின்நிலையத்தில் 100 மெகாவாட்டும் மின்சார உற்பத்தி குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட்டது.
அத்துடன், அந்த நேரத்தில் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரமும் வழங்கப்பட்டதோடு, தெருவிளக்குகள், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் விளக்குகள் எரிய வைக்கப்பட்டன. வீடுகளிலும் அந்த நேரத்தில் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்களை வழக்கமாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதனால், மின்விளக்குகள் அணைக்கப்பட்ட நேரத்தில் மின் அழுத்தம் ஏற்படாமல், வீட்டில் உள்ள மின்சார உபகரணங்கள் சேதம் அடைவது தடுக்கப்பட்டது.
மின்வாரியங்களில் 90 சதவீத ஊழியர்கள் பணிக்கு வருகின்றனர். இதனால், சில இடங்களில் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. இதனால், தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு தினமும் ரூ.80 கோடி இழப்பு
இந்த ஊரடங்கு காரணமாக, டாஸ்மாக் நிறுவனத்துக்கு நாள்தோறும் ரூ.80 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற 14-ந்தேதிக்கு பிறகுதான் மொத்த வருவாய் இழப்பு எவ்வளவு என்று தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story