கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றுநிலையை அடைந்துவிட்டதா? - சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்று நிலையை அடைந்து விட்டதா என்பது கட்டுப்படுத்துதல் திட்டம் முடிந்த பின்னரே தெரியவரும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் தமிழகம் சமூக தொற்று அடைந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 541. மேலும் அரசு கண்காணிப்பில் இருப்போர்களின் எண்ணிக்கை 127. தமிழகத்தில் இன்று (நேற்று) 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 85 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள். மற்ற ஒருவர் துபாய் சென்று வந்தது தெரியவந்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்து 612 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் 571 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் 1,848 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டு அருகே 8 கி.மீ. சுற்றளவில் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்படுத்துதல் திட்டத்தில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 860 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு அங்குள்ள 38 லட்சத்து 88 ஆயிரத்து 896 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை அதிக மூச்சுத்திணறல் உள்ள 650 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது வரை 4 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தான்.
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டுக்கு சென்று வந்தவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி பகலும், இரவாக நடைபெற்று வருகிறது. இதுவரை டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1,246 பேர் மருத்துவமனைகளுக்கு வந்துள்ளனர். மேலும் தொடர்ந்து கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகம் கொரோனா வைரஸ் தாக்கத்தில் தற்போது 2-வது நிலையில் தான் உள்ளது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த கண்காணிப்பில் தான் சமூக தொற்று இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவரும். தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் தொற்று நோய் கட்டுப்படுத்தல் திட்டம் முடிந்த பின்னரே எந்த நிலையில் இருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
இறந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது நபர் துபாயில் இருந்து வந்துள்ளார். அவர் ஏற்கனவே வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவர் கடைசி 1 மணி நேரம் மட்டுமே மருத்துவமனையில் இருந்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலைமையில் தான் அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
மேலும் இன்று (நேற்று) இறந்த மற்றொரு நபர் கடந்த 1-ந்தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மராட்டிய மாநிலத்தில் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டதை விட தமிழகத்தில் அதிகம்பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவுரைப்படி முறையாக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட அதிக கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் உள்ளது.
தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் இந்த கொரோனா பரிசோதனை மையம் அமைக்க தேவையான நவீன எந்திரங்கள் அனைத்தும் வாங்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்கள் வந்து சேரும் முன்னரே இங்குள்ள அனைத்து பரிசோதனை மைய பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளோம்.
தமிழகத்தில் உயர் அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அனைத்து குழுக்களுக்கும் என்னென்ன பணி என்று வழங்கப்பட்டுள்ளது. இந்த 12 குழுக்களின் பணியை தலைமைச் செயலாளர் நாள்தோறும் கண்காணித்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story