மு.க.ஸ்டாலினுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - ‘கொரோனா நோய் தடுப்பில் மத்திய அரசு கவனமாக செயல்படுகிறது’
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கொரோனா நோய் தடுப்பில் மத்திய அரசு கவனமாக செயல்படுவதாக கூறினார்.
சென்னை,
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளநிலையில், நேற்று பிரதமர் நரேந்திரமோடி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.
பின்னர், மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடியிடம், இம்மாதம் 8-ந் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்துக்கு தி.மு.க.வுக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி இதற்கான தகவலை தெரிவித்துள்ளதாகவும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அரசு கவனமாக செயல்பட்டு வருவதாக உறுதி கூறினார்.
இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷாவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
Related Tags :
Next Story