தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 690, பலி 7 ஆக உயர்வு
தமிழகத்தில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் 50 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. அந்த 50 பேரில் 48 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கொரோனா பாதிப்புக்கு இதுவரை 66,431 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 253 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 64 வயது பெண் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 நாட்கள் நிறைவு செய்தவர்கள் எண்ணிக்கை 27,416 ஆக உள்ளது.
தமிழகத்தில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 69 பேரில் 63 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 621ல் இருந்து 690 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் 11 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 19 பேர் வீடு திரும்பியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story