தமிழகத்தில் 13 வகை தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி வாபஸ்; தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் 13 வகை தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி வாபஸ்; தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 7 April 2020 9:44 PM IST (Updated: 7 April 2020 9:44 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 13 வகை தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதியை வாபஸ் பெற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தீவிர பணியாற்றி வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது.  இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது.  தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது.

ஊரடங்கை மதித்து, மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதனால் பால், மருந்து, மளிகை பொருட்கள் போன்றவற்றுக்கான கடைகளே திறந்திருக்கின்றன.  பிற பெரிய கடைகள், ஆலைகள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் 13 வகையான தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.  இதன்படி, இரும்பு, சிமெண்ட், உரம், மருந்து, சர்க்கரை, உருக்கு ஆகிய தொழிற்சாலைகள் செயல்படும் என அறிவித்தது.

சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலைகள், கண்ணாடி, தோல் பதனிடுதல், பேப்பர், டயர் ஆகிய தொழிற்சாலைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஆலைகளை அத்தியாவசிய பணிகள் பட்டியலில் சேர்த்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்றும் குறைவான தொழிலாளர்களை கொண்டு ஆலைகளை இயக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 13 வகை தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி வாபஸ் பெறப்படுகிறது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Next Story