உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முடிந்து, கடந்த பிப்ரவரி மாதம்வரை பனிக்காலம் இருந்தது. அதன்பின்னர், வெயில் காலம் தொடங்கிவிட்டது. தற்போது தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அத்தி பூத்தாற் போல மழையும் பெய்கிறது. குறிப்பாக, வெப்பசலனம் காரணமாக கடந்த 3 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென் தமிழகம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா வரையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், கோடை காலத்தில் ஏற்படும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்பட உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மழை பெய்யும்போது சூறைக்காற்றும் வீசக்கூடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘தேன்கனிக்கோட்டையில் 3 செ.மீ., கெட்டி, ஒசூர், சேரன்மகாதேவி, குன்னூர், உடுமலைப்பேட்டையில் தலா 2 செ.மீ., ஜிபஜார், நடுவட்டம், ஊட்டி, தளி, கீழ்கோதையாறில் தலா ஒரு செ.மீ. அளவு மழை பெய்துள்ளது.
Related Tags :
Next Story