எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வைகோ கோரிக்கை


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வைகோ கோரிக்கை
x
தினத்தந்தி 8 April 2020 3:00 AM IST (Updated: 8 April 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மனித சமூகத்தை அச்சத்தில் உறையச்செய்து இருக்கின்ற கொரோனா கிருமியை எதிர்த்து உலகமே போராடிக்கொண்டு இருக்கிறது.

ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிப்போம். வீட்டிலேயே தனித்திருப்போம். கொரோனா தொற்று பரவாமல் மக்களின் உயிரை காப்போம் என்ற உறுதியை மேற்கொள்ள தமிழக மக்களை அன்புடன் மீண்டும் வேண்டுகிறேன்.

இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளிப்போனதால் தேர்வுஎழுத துடித்துக்கொண்டு இருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் துவண்டுவிட்டனர். துள்ளி விளையாடவேண்டிய இளம்பிஞ்சுகள், ஊரடங்கு உத்தரவால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி முடங்கி கிடக்கின்றனர்.

பொதுத் தேர்வு என்ன ஆகுமோ? என்று மாணவர்களின் பெற்றோரும் தவியாய் தவிக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்துசெய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story