எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து - கி.வீரமணி எதிர்ப்பு
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்ததற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா தடுப்பு பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2 ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துவிட்டு அதை ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக மராட்டிய மாநிலத்துக்கு ரூ.1,611 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக நோய் தொற்று அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டுக்கு ரூ.510 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது என்ன நியாயம்?. அதேவேளையில் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.966 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.910 கோடி, பீகாருக்கு ரூ.708 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு ரூ.157 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. வடமாநிலங்களுக்கு நிதியை அள்ளிக்கொடுப்பதும், தென் மாநிலங்களுக்குக் கிள்ளிக் கொடுப்பதும் இந்த இக்கட்டான நேரத்தில் தேவைதானா?. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்பட்டது ஏற்புடையது அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுவது போன்று மாநில முதல்-அமைச்சர்களும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கூட தங்கள் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்துக்கொள்ள முன் வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story