ஊரடங்கை கூடுதல் கடுமையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்
ஊரடங்கை கூடுதல் கடுமையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவல் எந்த கட்டத்தை அடையக்கூடாது என்று அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அந்த சமூக பரவல் கட்டத்தை நாட்டின் சில பகுதிகள் எட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் நோய் பரவலை தடுக்க, இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விழுப்புரம் உள்பட பெரும்பான்மையான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆளான இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு வீடு, வீடாக சுகாதாரத்துறை பணியாளர்கள் சென்று நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவை முறையான நடவடிக்கைகள் ஆகும். ஆனால் அந்த நடவடிக்கைகள் மட்டுமே போதுமானவை அல்ல. ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிப்பதில் பல குறைபாடுகள் இருப்பது கவலை அளிக்கிறது. ஊரடங்கு நிலையை உறுதி செய்தால் மட்டுமே சமூகப்பரவல் எனப்படும் 3-வது நிலையை அடைவதை தடுத்து நிறுத்த முடியும்.
எனவே தமிழக மக்கள் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடித்து மிக மிக அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும்தான் வெளியில் வரவேண்டும். அதுமட்டுமின்றி பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் தமிழக அரசு தடை விதிக்கவேண்டும். ஊரடங்கு உத்தரவை இப்போதையைவிட இன்னும் கூடுதல் கடுமையுடன் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story