தமிழகத்தில் கடலோர பகுதிகள் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் கடலோர பகுதிகள் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 8 April 2020 5:27 PM IST (Updated: 8 April 2020 5:27 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடலோர பகுதிகள் உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  இதனால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், கோடை காலம் தொடங்கி, தமிழகத்தில் வெப்பம் பரவ தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் உள்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  தஞ்சாவூரில் அதிராம்பட்டினத்தில் கடந்த 5ந்தேதி காலையில் ஒரு மணிநேரம் வரை நல்ல மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அன்று பரவலாக மழை பெய்து குளிர்வித்தது.  கடலோர பகுதியான கன்னியாகுமரியில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மித அளவிலான மழை பெய்தது.

இதேபோன்று விருதுநகரில் அருப்புக்கோட்டை மற்றும் நகரை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது.  இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் ஆகியவற்றால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.  இதேபோன்று உள்மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story