வடமாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்களை மாநில எல்லைகளில் தடுக்காமல் தமிழகம் வர அனுமதிக்க வேண்டும் - பிரதமரிடம், அ.தி.மு.க. கோரிக்கை
வடமாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்களை மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தாமல் தமிழகம் வந்து சேர அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம், அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் அ.தி.மு.க. சார்பில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நவநீதகிருஷ்ணன் எம்.பி. கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் நவநீதகிருஷ்ணன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரசை இந்தியா எப்படி சந்திக்கிறது? அதை எப்படி கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பதற்கான விவரங்களை மூன்று துறைகளின் செயலாளர்கள் எங்களுக்கு விளக்கினார்கள்.
மருத்துவம், பொருளாதாரம் மற்றும் ஊரடங்கு ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய 3 வகையான தகவல்களை அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் வீடியோ மூலம் போட்டுக்காட்டப்பட்டது.
மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் சரியான நடவடிக்கையாகும். இதன்மூலம் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் நிதி கேட்டு 2 கடிதங்களை பிரதமருக்கு எழுதியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது அதை நானும் வலியுறுத்தினேன். இதை பிரதமர் மோடி குறித்துக் கொண்டார்.
முதல்-அமைச்சரின் வேண்டுகோள்படி பிரதமரிடம் நான் ஒரு கோரிக்கை வைத்தேன். தமிழகத்திற்கு வட இந்திய மாநிலங்களில் இருந்துதான் மளிகை பொருட்கள் வருகிறது. இந்த மளிகை பொருட்கள் ஏற்றிக்கொண்டு வரும் லாரி, டிரக் போன்ற வாகனங்களை எந்த மாநில எல்லையிலும் தடுத்து நிறுத்தாமல் தமிழகம் வந்து சேர அனுமதிக்க வேண்டும் என்று கூறினேன்.
தமிழகத்தில் வருகிற 14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தொடருமா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. முதல்-அமைச்சர் இதற்கு பதில் அளிக்க முடியும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை, கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story